இயற்கை வேளாண்மையில்
How to get more profit from Organic Farming ?
How to get more profit from Organic Farming ?
- அதிக விளைச்சல் பெற முடியாது, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றெல்லாம் பல மூடநம்பிக்கைகள் உலவுகின்றன. அதற்கு நேர்மாறாக இயற்கை வேளாண் பூச்சிவிரட்டிகள், இயற்கை கரைசல்களில் எளிய மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட பலனைப் பெற முடியும் என்று நிரூபித்து வருகிறார் விவசாயி ஸ்ரீதர்.
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கோட்டைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இயற்கை வேளாண் முறையில் சிறந்த விளைச்சலைத் தரும் வகையில் இயற்கை உரத் தயாரிப்பு முறைகளை இவர் கண்டறிந்துள்ளார். சாதாரணமாகக் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு, எல்லோரும் வீட்டிலேயே இந்த உரங்களைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இவற்றின் சிறப்பு.
மாவுப்பூச்சிக்கு கற்பூரக் கரைசல்
- ஒரு பயிரை முழுவதும் நாசம் செய்யக்கூடிய திறன் படைத்தது மாவுப்பூச்சி. அதை எளிதில் விரட்டிவிட முடியாது. ரசாயன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினாலும் மாவுப்பூச்சியை முழுமையாக அழிப்பது கடினம். இந்த பூச்சியை ஒழிப்பதற்குத் தீர்வாக ஸ்ரீதர் கண்டறிந்த உரம்தான் ‘கற்பூரக் கரைசல்’.
- வேப்ப எண்ணெய், கோமயம், கற்பூர வில்லை, மஞ்சள் தூள், கிளிஞ்சல் சுண்ணாம்புத் தூள் ஆகியவற்றை உரிய முறையில் சேர்த்துக் கலக்கிப் பயன்படுத்தினால் மாவுப்பூச்சி மூன்றே மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.
- பயிரின் வகையையும் பூச்சியின் வகையையும் பொறுத்து, ரசாயனப் பூச்சிக்கொல்லியின் வகையும் அளவும் மாறும். ஆனால், கற்பூரக் கரைசலை எந்தப் பயிருக்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். எல்லா பூச்சிகளிடமிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
- அது மட்டுமல்லால், கற்பூரக் கரைசல் பூச்சிக்கொல்லியாக மட்டும் செயல்படாமல் உரமாகவும் செயல்படுகிறது. இதை யார் வேண்டுமென்றாலும் தேவைக்கு ஏற்ப உடனடியாகத் தயாரித்துக்கொள்ளலாம். இதன் மூலம் ஏற்கெனவே பல்வேறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதைத் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு 150 ரூபாய்தான் செலவு ஆகும்.
மேம்படுத்தப்பட்ட
அமிர்தக்
கரைசல்
- வேளாண்மையில் பாக்டீரியாவின் பங்கு இன்றியமையாதது. அதை மண்ணுக்கு அளிக்கும் தன்மையுடையது ‘மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்’. ஒரு ஏக்கருக்கு 30 கிலோ சாணம் (நாட்டு மாடு / எருமையுடையது), 10 லிட்டர் கோமயம், 2 கிலோ கடலைப் புண்ணாக்கு, 10 வாழைப்பழம், 2 கிலோ வெல்லம், 1 பெரிய மஞ்சள் பூசணி, ¼ லிட்டர் தயிர். இவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கூழ் போல் கலக்கி, அதில் 50 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும். தினமும் ஒரு முறை நன்கு கலக்கிவிட வேண்டும். ஆறாவது நாள் முதல் இதைத் தேவைக்கேற்ப எடுத்து வயலில் பயன்படுத்தலாம். இதனால் நெற்கதிர்களில் தானியம் நன்கு பிடிக்கும்.
வறட்சியைத் தாங்க மீன் அமிலம்
- இயற்கை வேளாண்மையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மீன் அமிலம் தனக்குப் போதிய விளைச்சல் தராததால், அதிலும் சில மாற்றங்களை இவர் புகுத்தியுள்ளார். மீன் அமிலத்தில் சாதாரணமாக 50 சதவீதம் மீன் குடலும் 50 சதவீதம் வெல்லமும் இருக்கும். இவர் கண்டறிந்துள்ள புதிய முறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
- ஒரு ஏக்கருக்கு 10 கிலோ நாட்டு மீன் குடல், 13 கிலோ வெல்லம், 5 வாழை பழம், ¼ லிட்டர் தயிர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வெல்லம், அடுத்து மீன், பிறகு வாழையும் தயிரும் எனச் சேர்த்து வைக்க வேண்டும். இவை உண்ணக்கூடிய பொருட்கள் என்பதால் நாய், எலி, எறும்புகள் அணுகாத வகையில் பாதுகாப்பாக வைக்கவேண்டும். “சில நாட்களுக்கு பின் தேன் போல் காட்சியளிக்கும் மீன் அமிலம் கிடைக்கும்.
- இதை வயலில் பயன்படுத்தினால் பயிர் அமோகமாக வளரும். இந்த மீன் அமிலம் பயிருக்கு வறட்சியைத் தாங்ககூடிய ஆற்றலை அளிப்பதுடன், பயிர் விளைச்சலையும் ருசியானதாக மாற்றும்”, என்கிறார் ஸ்ரீதர்.
மண்புழு உரம் அவசியம்
- கற்பூரக் கரைசல், மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவை செடிக்கு நன்கு ஊட்டமளித்தும் நோய் அண்டாமலும் பாதுகாக்கும். ஆனால் மண்புழு இன்றி வேளாண் வளர்ச்சி முழுமையடையாது. “பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் மண்புழு உரம் 1 ½ டன் இட வேண்டும்.
- முதல் 500 கிலோவை நடும் போதும், இரண்டாவது 500 கிலோவை வளர்ச்சி பருவத்திலும், மூன்றாவது 500 கிலோவை வரப்புக்கு வெளியே கதிர்கள் தென்பட ஆரம்பிக்கும்போது இட வேண்டும். இந்த முறையைப் பின்பற்றினால் அமோக விளைச்சல் நிச்சயம்”, என்கிறார் ஸ்ரீதர். இந்த மேம்படுத்தப்பட்ட உத்திகள் மூலம் இயற்கை வேளாண்மையில் அமோக அறுவடை நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் ஸ்ரீதர்.
விவசாயி ஸ்ரீதர் தொடர்புக்கு: 09092779779
மேலும் பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்...
Click Here for Read more Useful Contents.....
Click Here for Read more Useful Contents.....
No comments:
Post a Comment