Google Search

Latest Tips And Tricks

Follow by Email

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

Follow by E-Mail

விவசாயம் அழிந்து போக காரணமே?

  • தமிழகத்தில் நாளுக்கு நாள் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் டில்லி வரை சென்று போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
  • விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்பது பழமொழி. இப்போது சேற்றில் கால் வைக்கும் விவசாயிகள் குறைந்து வருகிறார்கள்.

  • தமிழக கிராமங்களில் விடியற்காலையில் எழுந்த உடன் கூலி வேலை செய்யும் விவசாயிகள், ஆண்கள், பெண்கள் என தங்கள் வயல் வெளி அல்லது கிராமத்தில் அதிக நிலம் வைத்துள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்வதை பார்த்துள்ளோம்.



  • கடந்த சில வருடங்களாக 100 நாள் வேலை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அது முதல் விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் குறைந்து விட்டனர்.
  • காரணம் 100 நாள் வேலை திட்டத்தில் 8 மணிக்கு சென்று மதியம் வரை வேலை பார்த்தால் கூலி கிடைத்து விடுகிறது.
  • பிறகு எதற்கு விவசாய நிலத்திற்கு விடியற்காலை சென்று மாலை வரை வேலை பார்க்கவேண்டும் என்பதே அவர்கள் வாதம்.
  • 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறிது நேரம் குளம், குட்டைகளில் புல் பிடுங்கி விட்டு, மீதி நேரம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற ஒயர் கூடை பின்னுவது, பீடி சுற்றுவது என  தங்கள் சொந்த வேலையை செய்து கொள்கின்றனர்.
  • கஷ்டப்படாமல் அரசு கொடுக்கும் கூலி கிடைத்து விடுகிறது. பிறகு எதற்கு விவசாய வேலைக்கு செல்லவேண்டும் என நினைத்து விடுகின்றனர்.

  • அதன்காரணமாக விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் வயலில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் பல விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
  • அப்படியே வேலைக்கு வருவோர் கேட்கும் கூலி விவசாயிகளை அதிர்ச்சியடைய வைக்கிறது. சில விவசாயிகள் தங்களுக்கு வேலை ஆக வேண்டுமே என்று அதிக கூலி கொடுத்து வேலை செய்ய வைக்கின்றனர்.

ஆதாரம் இதோ...

விவசாயம் அழிந்து போக காரணமே 100 நாள் வேலை திட்டம்தாங்க! அபாயத்தை நோக்கி தமிழகம்!


காணாமல் போகும் இந்திய விவசாயிகள் Where is Agriculture MAN...?

  • 1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி. கடந்த இருபத்திரண்டு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 50% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.


  • 1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, விவசாயம் சாராத துறைகள் உள்ளிட்டு, பொதுவாகவே புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், விவசாயக் கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.


  • 1981-லிருந்து 1991 வரையிலான கால கட்டத்தில் விவசாயிகளின் (பயிர்த் தொழிலில் நேரடியாக ஈடுபடுவோர்) எண்ணிக்கை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இருபத்திரண்டு வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய நிலையில், கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 85 இந்தியர்கள் விவசாயத்திலிருந்து விலகிச் சென்ற வண்ணம் உள்ளனர்.


  • ஆக, இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் பயிர் தொழிலில் எட்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசு வேறு ஒரு மோசடியான புள்ளிவிவரக் கணக்கை முன்வைக்கிறது. அதாவது, விவசாயத்தில் நேரடியான பயிர் தொழிலில் இல்லாமல், அதைச் சார்ந்த கூலி வேலைகள், கால் நடைகள் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோரையும் சேர்த்து மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் விவசாயத்தில் இருப்பதாகச் சொல்கிறது. இவ்வாறு சொல்வதன் மூலம், கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள 2,70,940 விவசாயிகள் தற்கொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.

‘விவசாயி தற்கொலை’ என்பதை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்?

  • குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – இதனை மொத்த மக்கள் தொகையில் உள்ள விவசாயிகளின் சதவீதம் எட்டுக்கும் குறைவானது என்கிற திட்ட கமிஷன் அறிக்கையோடு பொருத்திப் பார்த்தால் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருக்கிறது.


  • விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
  • இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது – தற்போது அது சுமார் 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சேவை துறை

  • உலகமய தாசர்களுக்கோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறது. நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள்.


  • இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில்துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு தற்போது 10 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது அச்சங்கம்.

  • சேவைத் துறையில் பெரும் பங்காற்றும் ஐ.டி துறையோ தற்போது அமெரிக்காவின் தள்ளாட்டத்திற்கு தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சியும் தேக்கமடைந்து விட்டது. இச்சூழலில் விவசாயத்தின் அழிவும் அதைத் தொடர்ந்து கிராமப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் ஊரகப் பகுதிகளில் இருந்து விசிறியடிக்கப்பட்டு நகரங்களில் அத்துக் கூலிகளாய்க் குவிந்துள்ள மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மீண்டும் கிராமத்துக்கே சென்று விவசாயத்தை மீளவும் துவங்குவது சாத்தியமற்றதாகி விட்ட நிலையில், நகர்ப்புறங்களின் சேரிகளிலும் நடைபாதைகளிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.


  • விவசாயத்தின் அழிவு தேசத்தை உணவுப் பொருள் உற்பத்தியில் பற்றாக்குறையையும் அதைத் தொடர்ந்த பஞ்சத்தையும் நோக்கி மெல்ல மெல்ல இழுத்துச் செல்கிறது. விவசாயத்திற்கும் உள்நாட்டுத் தொழில்துறைக்கும் துரோகமிழைத்து நாட்டை மீண்டும் அடிமையாக்கத் துடிக்கும் காரணிகளை உடனடியாக வீழ்த்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் அழிவை இந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும்.

அழிவை நோக்கி விவசாயம்.... Agriculture going to end...

மின்தடை! மின்தடை!! மின்தடை!!! தற்போது எங்கு சென்றாலும் கேட்கக்கூடிய வாசகமாக மாறிவிட்டது. இதில் மிகவும் பாதிப்பிற்குரியவர்கள் விவசாயிகளே! விவசாயிகளின் நிலைமை சொல்லக்கூடிய நிலையில் இல்லை. மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றி மிகவும் வேதனையடைந்தேன். காரணம், நானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். கேட்க யாருமில்லை என்ற அளவிற்கு, விருப்பத்திற்கு மின்விநியோகம் நடைபெறுவதும், மின்தடை ஏற்படுவதும் நடைபெற்றது. இப்படியே சென்றால் விவசாயம், விவசாயிகளின் எதிர்கால நிலை என்னவாகும்?

சரி, விஷயத்திற்கு வருகிறேன். 24 மணி நேரத்தில் பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமுமாக மொத்தம் 6 மணி நேரம் மின்விநியோகம் நடைபெறுகிறது. பகல் 3 மணி நேரத்தில் என்ன நடக்கிறது? சரியான நேரத்திற்கு மின்விநியோகம் நடைபெறுவதில்லை, அப்படியே நடைபெற்றாலும் முழுவதுமாக 3 மணி நேரம் விநியோகிக்கப்படுவதில்லை. 3 மணி நேரத்தில் எத்தனை மின்தடைகள் ஏற்படுகின்றன தெரியுமா? 



முழுமையாகப் பார்த்தால் 3 மணி நேரத்தில் 1 மணி நேரம் கூட மின் விநியோகம் நடைபெறுவதில்லை. அந்த 3 மணி நேரத்தில் எத்தனை மின்தடைகள்? சரி, இது இருக்கட்டும். நள்ளிரவு மின் விநியோகத்தை என்னவென்று சொல்வது? கண்விழித்து நீர் இறைக்கும் விவசாயிகள் வயலில் இருக்கும்போது மின்தடை. என்ன செய்வார்கள்? மீண்டும் மின்சாரம் எப்பொழுது வருமோ என மோட்டார் அருகே காத்துக்கிடக்க வேண்டும். வந்தால் மட்டுமே சாத்தியம். வரவில்லையென்றால் தூக்கமும் போய், தண்ணீரையும் இறைக்காமல் மனவேதனைக்கு உள்ளாகின்றனர்.


ஏற்கனவே, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் நிலையில், இப்படிப்பட்ட சீரற்ற மின்விநியோகம் விவசாயத்தை வெறுக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளுகிறது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை என்ற பொன்மொழிகள் வெறும் ஏட்டிலேயே இருக்கப்போகின்றன. தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைப்பட வைக்கிறது. இப்படியே சென்றால் விவசாயம் அழிந்து, உணவிற்காக மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்படும்.


கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெறும் இடங்களாக கிராமங்கள் மாறிவிட்டன. பொதுவாக குற்றச்செயல்கள் நகர்ப்பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என்று சொல்வதுண்டு. ஆனால், தற்போது கிராமங்களில் நிலைமை முற்றிலுமாக மாறிவருகிறது. இத்தனைக்கும் காரணம் மின்சாரம் இல்லை, அதனால் விவசாயம் இல்லை, எனவே உற்பத்தியும் இல்லை, சம்பாத்தியமும் இல்லை. விவசாயிகளுக்கு விவசாயத்தை விட்டால் வேறு என்ன தெரியும்? அடிப்படை தேவையான மின்சாரமே இல்லையென்றால், விவசாயிகள் என்ன செய்வார்கள்? பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பலர் கடனாளியாகின்றனர். இதன்காரணமாக தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன.


எனவே அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை அழிவுப்பாதையிலிருந்து மீட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும்.

காவிரிப் படுகையை சீரழிக்கும் ‘மீதேன்’ வாயு திட்டம்

தமிழகம் குப்பைத் தொட்டியா?
ஏற்கனவே உலகம் பூராவும் மேலை நாடுகளின் லாப வெறியால் தொழில் என்ற பெயரால் ஏராளமான கரியமிலவாயு வெளியேற்றப்பட்டதால், பூமி வெப்ப மடைந்து வருகிறது. அண்டார்டிகா பனிமலைகளே கரைந்து கொண்டிருக்கின்றன.
சுற்றுச் சூழல் கேடு, வெப்பம் காரணமாக மேலை நாட்டு மக்களின் விழிப்புணர்வு காரணமாக அங்கெல்லாம் புதிதாக தொழில்கள் தொடங்க கடும் எதிர்ப்புள்ள நிலையில் எங்கே சென்று குப்பைக் கொட்டலாம் என்று அலைகிறார்கள் தொழிலதிபர்கள். ஏற்கனவே மோசமான மேலை நாட்டுக் குப்பைகளெல்லாம் தூத்துக்குடி பகுதி கடலில் கொட்டப்படுகிறது.
கார் போன்ற பல பொருட்கள் இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பல உள்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதே இல்லை. 100 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு நமது அரசுகள் அரசு நிலங்களையும், நமது மக்களின் நிலங்களையும் பிடுங்கி வழங்குகிறது. 24 மணி நேரமும் மின்சாரமும், தண்ணீரும் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது அரசு. இதனாலேயே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை.


காவிரிப் படுகையை சீரழிக்கும் ‘மீதேன்’ வாயு திட்டம்
காவிரிப்படுகையில் அமைந்துள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், ஒரத்தநாடு, மன்னார்குடி, குடவாசல், திருவாரூர் ஆகிய வட்டங்களில் பூமிக்கு அடியில் அதிக அளவில் மீதேன் எரிவாயு உள்ளதாம். இதை எடுத்தே ஆக வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்களும் மத்திய அரசும் உறுதி கொண்டுள்ளன.
அதனால் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்த மன்னார்குடி பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டங்கள் மூலம் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த நிறுவனங்கள் தொழில் நுட்பத்தை மாற்ற முனைகின்றன. நெய்வேலி போல திறந்த வெளிச் சுரங்கம் தோண்டினால் ஆரம்ப நிலையிலேயே மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், 50 மீட்டர் முதல் 600 மீட்டர் இராட்சச ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதன் மூலம் மீதேன் வாயுவை உறிஞ்சி இழுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
அப்படி ஆழ்குழாய்கள் மூலம் மீதேன் வாயு எடுக்கப்படும்போது நிலத்துக்கு அடியில் வெற்றிடம் தோன்றும். அந்த வெற்றிடம் வேறொரு பொருளால் நிரப்பப்பட வேண்டும். அப்படி நடக்கும்போது நிலத்தின் மேல் பகுதியிலுள்ள குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீரும் கீழே இறங்கும். மேலே வசிக்கின்ற மக்களுக்கு நீரே கிடைக்காமல் போகும். மேற்படி பகுதிகள் வறண்ட பிரதேசமாக மாறும். அடி ஆழத்திலுள்ள கடல் நீரைப்போல் 5 மடங்கு உப்பு நிறைந்த நீர் மேலே இழுக்கப்பட்டு வெளித் தள்ளப்படும். தள்ளப்படும் தண்ணீர் ஏற்கெனவே இப்பகுதிகளிலுள்ள வாய்க்கால் ஆகவும், வடிகால் ஆகவும் பயன்பட்டுவரும் ஆறுகளில் விடப்பட உள்ளது. இதன் மூலம் நமது நிலம் பூராவும் உப்பாக மாறும் அபாயம் உள்ளது. பிறகென்ன? நிலத்திலுள்ள அனைத்து சிற்றுயிர்களும் அழிந்து போகும். புல், பூண்டு கூட முளைக் காது. மேலும் அருகாமையிலுள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, பட்டுக் கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகள் வழியாக கடல்நீர் உள்ளே புகும். உப்பு நீர் உள்ளே புகுவதால் மேலே உள்ள தாவரங்கள் அழியும்.

இதேபோல் மேலே உள்ள நீர் கீழே இறங்கும்போது, மேலே சொல்லப்பட்ட பகுதிகள் மட்டு மல்ல, தஞ்சைக்கு மேலேயுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதி களிலுள்ள நன்னீரும் கீழே இறங்கி விடும். பிறகென்ன? ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட மக்கள் பஞ்சம் பிழைக்க இடம் தேடி வேண்டியது தான்.
தொழில் வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வு ஆதாரங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.
இப்படிப்பட்ட தொழில் வளர்ச்சி தேவைதானா? தொழில் வளர்ச்சிக்காக உடல் உழைப்பை செலுத்தும் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது. ஒரு லட்சம் மக்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அழகான கான்க்ரீட் வீடுகளைக் கட்டுவதற்கான தொகையைக் கொண்டு, அதாவது 8000 கோடி ரூபாயில் 4 பேர் வசிப்பதற்கு ஒரு வீடு அம்பானிக்கு மும்பையில் கட்டப்பட்டுள்ளது. இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு அல்லவா? ஒண்டுவதற்கு ஓலைக் குடிசைகூட இல்லாமல் சாலையோரம் குடும்பம் நடத்துவோர் எத்தனை பேர்?

தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் பாண்டிச்சேரியை அடுத்து பாகூரில் தொடங்கி நெய்வேலி, சிறிமுஷ்ணம், ஜயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதோடு சேர்ந்து மீதேன் என்ற எரிவாயுவும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
• பழுப்பு நிலக்கரியின் மதிப்பீடு: பாகூர் பகுதி - 766 மில்லியன் டன்.
• நெய்வேலி, ஜயங்கொண்டம், வீராணம் பகுதி : 6835 மில்லியன் டன்.
• மன்னார்குடி பகுதியோ : 19788 மில்லியன் டன்
• இப்பகுதியிலுள்ள மீதேன் வாயுவின் மதிப்பீடு: 98000 கோடி கன அடி முதலில் மீத்தேன் வாயுவை எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
வளரும் எரிவாயுத் தேவைகளுக்காக இந்த மீதேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடெட்” என்ற நிறுவனத்துக்கு 29.07.2010 அன்று வழங்கியுள்ள உரிமத்தின் விவரங்கள் வருமாறு:
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்கள்.
• திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்கள்.

• மொத்த நிலப்பரப்பு: 691 சதுர கிலோ மீட்டர்கள். இதில் 24 சதுர கி.மீ. பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 667 ச.கி.மீ. (1,66,210 ஏக்கர்கள்) மீதேன் எடுக்க தரப்பட்டுள்ளன.
•              04.01.2011இல் தமிழக அரசுடன் க்ரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கம்பெனி லிமிடெட் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு தொழிற்துறை முதன்மை செயலாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
• மீதேன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி, தமிழக அரசின் முன் அனுமதி ஆகியன பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
• உள்ளுறைக் கிணறுகளுக்கான துளையிடும் வேலைகள் 2012 இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் கூறியிருந்தது.
• முதற்கட்ட வேலையாக தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 38 உள்ளுறை கிணறுகளுக்குமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.
• நிலப்படுகை மீதேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. நிலக்கரிப் படிமத்தில் அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப் பரப்பில் ஒட்டியிருப்பது.
• மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்றது.
• தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்த படிமங்களை அழுத்திக் கொண்டுள்ளது.
• இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீதேன் வாயு நிலக்கரிப் பாறைகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.
• நிலக்கரிப் பாறை மீதுள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு வெளிவர முடியும்.
• அடுத்த கட்டமாக வெற்றிட மாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும்.

• அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1650 அடி வரை வெளி யேற்றப்படும் போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்கு கீழே இறங்கி விடுவதோடு, இந்த மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றி யுள்ள மாவட்டங்களுக்கு தொடர் புள்ள நிலத்தடி நீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும்.
• எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருகாமையிலுள்ள வங்கக் கடலின் உப்புநீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும், பேரழிவு நிகழும்.
• நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்ற பேராபத்துக்கள் நிகழும் அபாயங்களும் உண்டு.
வெளியேற்றப்படும் நிலத்தடி நீர்: ஒரு சுற்றுச் சூழல் பேரிடர்
• ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுக்களைக் கொண்டது.
• கடல் நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்து மடங்கு வரை அதிகமான உப்பு இதில் உள்ளது.
• குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளோரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், பலவித நீர் கரிமப் பொருட்கள், கதிரியக்கக் கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கின்றன.
•              80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக் கொணடால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம்.

• நாளுக்கு சுமார் 20000 கேலன் (75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும்.
• மாசு நிறைந்த இந்த நீரை தற்போது பாசன / வடிகால் வாய்க்கால்களாக பயன்பட்டுக் கொண்டிருக்கும் வாய்க்கால், ஆறு வலைப் பின்னலில் விடத் திட்டமிடுகிறார்கள்.
• இது மிகவும் ஆபத்தானது. நாசத்தை விலை கொடுத்து வாங்கும் இந்த மூடத்தனத்தால் ஒரு பேரழிப்பு தமிழகத்தை சூழும் அபாயம் உள்ளது

விவசாயம் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான்!

``இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது எட்டாவதோ, பத்தாவதோ படிக்க வைத்து, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தந்தையும் நினைக்கிறான். மில் வேலையில் கிடைக்கும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வாங்கத்தான் ஒவ்வொரு இளைஞனும் ஆசைப்படுகிறானே தவிர, வேளாண்மை செய்ய ஆசைப்படுவதில்லை. அவ்வளவு ஏன், பட்டரை வேலைக்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள். மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்ட வேண்டும் என்றால் சிதறி ஓடி விடுகிறார்கள்.



விவசாயிகள் விவசாயக் கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமை இன்னும் சில காலம் தொடர்ந்தால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புண்டு. விவசாயமும் விவசாயிகளும் அழிவதற்குக் காரணம் அரசியல்வாதிகளும் அவர்கள் வகுத்த ஒப்பந்தங்களும்தான்'' - இப்படி மனம் கொதித்து பேசுகிறார் மாம்பாக்கம் விவசாயி வீரபத்ரன்.

கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கும் வீரபத்ரன், பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். பொருளாதாரத் துறையில் புகழ் பெற்ற பேராசிரியராக இருந்த எம்.ஜி.ரங்காவின் மாணவர். அரசு வேலை கிடைத்த போதும், விவசாயமே போதும் என்று இருந்துவிட்டார். மாம்பாக்கம் ஒன்றியத்தின் சேர்மனாகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். விவசாயிகளின் இன்றைய நிலை பற்றி அவர் மனம் புழுங்கிப் பேசிய பேச்சு இதோ...

''தமிழ்நாட்டில் உழுதவன் கணக்கு பார்த்தால் உழவுக் கோல் இருக்காது என்று சொல்லும் நிலைதான் பரவலாக இருக்கிறது. எல்லோருக்கும் கல்வி கொடுத்தார்கள். ஆனால், பண்டைய காலத்திலிருந்து விவசாயியின் குழந்தைகளுக்கு மட்டும் படிப்பே கொடுக்காமல் பாமரனாகத்தான் வைத்திருந்தார்கள்.


விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததற்கு காரணம், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதுதான். உதாரணமாக, 1970ஆம் ஆண்டில் 35 குதிரை சக்தி கொண்ட ஒரு டிராக்டரின் விலை இருபதாயிரம் ரூபாய். அப்போது ஒரு மூட்டை நெல் (75 கிலோ) 45 முதல் 50 ரூபாய் வரை விற்றது. கிட்டத்தட்ட 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடிந்தது. ஆனால் அதே டிராக்டரின் விலை இன்று சுமார் 5 லட்ச ரூபாய். ஆனால், ஒரு மூட்டை நெல்லின் விலை 350 முதல் 400 ரூபாய்தான். கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். நெல்லின் பண்டமாற்று சக்தி (எக்ஸ்சேஞ்ச் வால்யூ) எப்படித் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அன்று ஒரு டன் இரும்பு ஆயிரம் ரூபாய். இருபது மூட்டை நெல் விற்று ஒரு டன் இரும்பை வாங்க முடிந்தது. இன்றைய தேதியில் 75 மூட்டை நெல் விற்றால்தான் வாங்க முடியும்.


அன்று ஒரு மாடு ஆயிரம் ரூபாய். அதே மாடு இன்று இருபதாயிரம் ரூபாய். அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 0.67 காசுதான். இன்று அதே டீசல் 35 ரூபாய்.

அன்று தினக்கூலி வெறும் 2.50. இன்று நூறு ரூபாய். அன்று ஒரு மண்வெட்டி விலை இரண்டு ரூபாய். இன்று ஒரு மண்வெட்டியின் விலை 90 ரூபாய்.

எதற்காக இத்தனைப் புள்ளிவிபரங்களைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?

இவை எல்லாம் ஒரு விவசாயிக்குத் தேவையான முக்கியமான இடுபொருட்கள். விலை பார்க்காமல் ஒவ்வொரு விவசாயியும் இதை வாங்கியே தீரவேண்டும்.

தவிர, விவசாயியும் சாதாரண மனிதன்தான் என்கிற முறையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவன் செலவு செய்தாக வேண்டியிருக்குது. உதாரணமாக, அன்று ஒரு சோப் விலை ஐம்பது காசு. இன்று அதே சோப்பின் விலை 12 ரூபாய். அன்று ஒரு பிஸ்கட்டின் விலை 50 பைசா. இன்று 11 ரூபாய். அன்று ஒரு வேட்டி இரண்டு ரூபாய்க்குள் கிடைத்தது. இங்கு 50 ரூபாய்க்கும் அதிகம்.

அன்று ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் வாங்க முடிந்தது. இன்று 25 மூட்டைகள் விற்றால் பவுன் பார்க்க முடியும்.

1970 முதல் 2000 ஆண்டுக்குள் தொழிற்சாலைப் பொருட்களின் விலை 35 முதல் 40 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு உத்யோகஸ்தர்களின் ஊதியம் 50 மடங்கு உயர்ந்துள்ளது. ரூபாய் கணக்கில் முதலில் போடப்பட்ட திட்டங்கள் ஆயிரமாகி, லட்சமாகி, இன்று கோடிகளை தாண்டிவிட்டது. ஆனால், நெல் மற்றும் கோதுமையின் விலை மட்டும் 8 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வை யார் இதை உருவாக்கினார்கள் அல்லது எதனால் உருவானது? இதை சீர்படுத்த எந்த அரசியல்வாதியிடமாவது ஏதாவது திட்டம் இருக்கிறதா? மற்ற எல்லாப் பொருட்களின் விலையும் அபாரமாக உயரும். ஆனால் விவசாயி விளைவிக்கும் பொருட்கள் மட்டும் அவ்வளவு உயராது என்றால் அது என்ன நியாயம்?


கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசில் உள்ளவர்கள் ஐந்து ஊதியக் கமிஷன் அமைத்து தங்கள் ஊதியங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்களே ஒழிய, படிக்காத விவசாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமென்று அவர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை! பருத்தித் தற்கொலைகள் எத்தனையோ நடந்த போதும், அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நம் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை வெளிநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எப்போதோ ஏற்பட்டது. 1939ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பல விதமான எதிர்ப்புகளுக்கிடையே தனது சாதுர்யத்தை பயன்படுத்தி நான்கு முக்கியமான சட்டங்களைக் கொண்டு வந்தார். அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணச் சங்கம், நில நிர்வாகச் சட்டம், விலை நிர்ணய சட்டம், விவசாய உற்பத்தியாளர் அங்காடிச் சட்டம் எனக் கொண்டு சட்டங்களை இயற்றினார்.

இந்தச் சட்டத்தின்படி, எல்லா விவசாயிகளின் கடனும் ரத்து செய்யப்பட்டது. எல்லாத் துறைகளிலும் விளை நிலம் உயர்ந்துள்ளது போல, விவசாயத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. அந்த விலைக்குப் பின்பும் அதிகம் ஏறவும், இறங்கவும் முடியாத படிக்கு, உற்பத்தியாளர் சந்தைகள் வாரந்தோறும் அமைக்கப்பட்டது. தேவைக்கு மேல் உற்பத்தி காட்டாமல் இருக்க, அதாவது விவசாயிகள், விவசாயம் செய்யாமல் சும்மா இருக்க பண்ணை எப்படி மானியம் கொடுத்தார்கள்.

இன்று அமெரிக்காலும், கனடாவிலும் விவசாயம் செய்ய ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கிறார்கள். கொடுத்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். மானியத்தை உரிமையோடு வசூல் செய்ய அங்கு சட்டமே உள்ளது.

நம் நாட்டில் அரசியல்வாதிகள், விவசாயிகளின் உண்மையான பிரச்னையைக் கண்டறிவதற்கு பதிலாக, மானியத்துக்கு மேல் மானியம் கொடுத்தார்கள். மின்சாரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். இதனால் பம்ப்செட் பயன்பாடு பெருகியது. நிலத்தடி நீர் அதாலபாதாளத்திற்குப் போனது. உரத்திற்கு மானியம் கொடுத்தார்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கிறதே என எல்லா விவசாயிகளும் உரத்தை வாங்கி நிலத்தில் கொட்டினார்கள். மகசூல் பெருகுவதற்குப் பதிலாக நிலம் பாழாய் போனது மிச்சம்.


வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். பரிதாபப்பட்ட அரசாங்கம், வட்டியை ரத்து செய்ததே ஒழிய கடனை ரத்து செய்யவில்லை. இன்றும் அதிகமாக கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். இந்த ஜென்மம் முழுக்க உழைத்தாலும் விவசாயி கடன் இல்லாமல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
`விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'எங்களுக்குத் தேவை எந்த இலவசங்களும் அல்ல. எங்கள் குறைகளைத் தீர்க்கும் சரியான திட்டங்கள்தான்' என்று ஒரே குரலில் சொல்ல வேண்டும். அந்தக் குரல் அதிகார அமைப்பில் உள்ளவர்களின் காதுகளை எட்ட வேண்டும். தற்போது விவசாயியின் முகத்தில் புன்னகையை பார்க்க முடியும். விவசாயத்திற்கு ஒரு மரியாதை கிடைக்கும்!'' என்று பொருமித் தீர்த்தார் வீரபத்திரன்.

ஆர அமர யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதில் நிறைய நியாயம் இருப்பது புரியும்.

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்! - Tasty Cutlet from waste rice food




சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!
Tasty Cutlet from waste rice food
  • என்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கீங்களா. கவலையே வேண்டாம் நீங்கள் வீட்டிலேயே ருசியான கலர்புல்லான ரைஸ் கட்லட் செய்து கொடுத்து எல்லாரையும் அசத்திடலாம்
  • இந்த ரைஸ் கட்லட் உங்கள் நாவிற்கு ருசியான ஸ்நாக்ஸ் என்பதால் கண்டிப்பாக உங்கள் மழைக்காலத்தை இதுவரை நீங்கள் கண்டிராத புது அனுபவமாக மாற்றி விடும். இதுவரை ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் எளிதாக ரைஸ் கட்லட் செய்து விட முடியும்




  • கண்டிப்பாக இந்த ஸ்நாக்ஸ் உங்கள் வீட்டு குழந்தைகளையும் ருசிபார்க்க வைத்து விடும். மற்ற சிப்ஸ் போன்றவற்றை விட இது மிகவும் ஆரோக்கியமானது. இதனுடன் சட்னி சேர்த்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். என்னங்க இப்பவே சாப்பிடனும் போல தோனுதா சரி சரி வாங்க இந்த ரைஸ் கட்லட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.



  1. பரிமாறும் எண்ணிக்கை :10 கட்லட் தயாரிக்கும்
  2. நேரம் :15 நிமிடங்கள் சமைக்கும்
  3. நேரம் :10 நிமிடங்கள்
  4. தேவையான பொருட்கள்
  5. சமைக்கப்பட்ட சாதம் – 1கப்
  6. வேக வைத்த உருளைக்கிழங்கு – 1(தோலுரித்து மசித்து கொள்ளவும்)
  7. காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) – 1கப் (நறுக்கியது)
  8. பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
  9. இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  10. பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
  11. மிளகாய் தூள் – 1/4 “டேபிள் ஸ்பூன்
  12. கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  13. உப்புதேவைக்கேற்ப
  14. மஞ்சள் தூள்கொஞ்சம்
  15. சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்
  16. தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  17. மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்
  18. கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  19. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)



செய்முறை :
1. ஒரு பெளலை எடுத்து எண்ணெய்யை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.
2. கையை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.
3. இப்பொழுது டேஸ்ட் பார்த்துக் கொண்டு உப்பு, காரம் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
4. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
5. ஒரு தட்டில் சிறிது மாவை தூவி விட வேண்டும்.
6. இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையை கொண்டு டிக்கிஸ் தயாரிக்க வேண்டும். அதாவது கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக கட்லட் வடிவத்தில் தட்ட வேண்டும். இது தான் டிக்கிஸ். இந்த டிக்கிஸை மாவு தூவப்பட்ட தட்டில் வைத்து கொள்ளவும்.
7. வாணலியை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
8. எண்ணெய் மிதமாக சூடானதும் டிக்கிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.
9. டிக்கிஸ் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
10. பொன்னிறமாக வரும் வரை திருப்பிக்கிட்டே இருக்க வேண்டும்.
11. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிய டிஸ்யூ பேப்பர் விரித்து கொள்ளுங்கள்
12. இப்பொழுது அந்த தட்டில் பொரித்த கட்லட்டை வைக்கவும்.
13. சுவையான ரைஸ் கட்லட் ரெடி இந்த கட்லட்டுடன் சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.


  • கவனத்தில் வைக்க வேண்டியவை தட்டில் மாவை தூவி அதன் மேல் கட்லட்டை வைப்பது முக்கியம். இது கட்லட் தட்டில் ஒட்டாமல் இருக்க உதவுகிறது பேசன் மாவிற்கு பதில் நீங்கள் வறுத்த பொரி கடலை மாவை கூட பயன்படுத்தினாலும் கட்லட் நன்றாக வரும்.

  • இன்னும் சுவையாக மணமாக கட்லட் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும். உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தியும் செய்யலாம் என்னங்க ரெடியாகி விட்டீங்களா உங்க வீட்லயும் கட்லட் செய்து அசத்துவதற்கு.
 

Posts

Follow by Email

1searcher Networks

My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips